தற்குறிப்பேற்ற அணி

தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில் ஒன்றான அணி இலக்கணத்தில் அணி என்றால் அழகு என்பது பொருள். புலவர்கள், பொருளழகும் சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே அணியிலக்கணம். 

  • தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்

தற்குறிப்பேற்ற அணி பற்றி அறிந்துக் கொள்ளும் முன்பு கீழே குறிப்பிட்டுள்ள அணியிலக்கணம் பற்றிய பதிவுகளை நினைவுகூர்க.

அணி இலக்கணம்

பாடத்தலைப்புகள்(toc)

தற்குறிப்பேற்ற அணி விளக்கம்

மக்களுக்கு அழகு அணிகலன்கள் அது சேர்ப்பன போன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள். அத்தகைய அணிகளுள் தற்குறிப்பேற்ற அணி பற்றி இங்குக் காண்போம்.

"பெயர்பொருள் அல்பொருள் எனவிரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று
தான்குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம் - தண்டி.நூ.56


தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது, தற்குறிப்பேற்ற அணி.  

இயற்கையில், எப்பொழுதும் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றின் மேல், புலவர் தாம் உணர்த்த விரும்பிய குறிப்பை ஏற்றிக் கூறுதல்.

  • ( தன் + குறிப்பு + ஏற்றம் + அணி ) = தற்குறிப்பேற்ற அணி 

தற்குறிப்பேற்ற அணி எடுத்துக்காட்டு 1

தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம் 


பாடலின் பொருள்

விடியற்காலையில் கோழிகள் கூவுதல் இயல்பான நிகழ்ச்சி. 

அணிப்பொருத்தம் 

ஆனால் கவிஞர், காட்டில் நள்ளிரவில் கணவனைப் பிரிந்து வருத்தமுற்ற தமயந்தியின் துயரைப் போக்க, இருளை நீக்குவதற்குத் தேரேறி விரைந்து வருமாறு ஞாயிற்றைக் கோழிக் கூட்டங்கள் கூவி அழைப்பதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். 

எனவே, இது தற்குறிப்பேற்ற அணி.

தற்குறிப்பேற்ற அணி எடுத்துக்காட்டு 2 - சிலப்பதிகாரம் சான்று

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட  - சிலப்பதிகாரம்


பாடலின் பொருள் 

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள். 

அணிப்பொருத்தம் 

கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. 

ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, இம்மதுரைக்குள் வரவேண்டா என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.

அவர்களுக்கு நடக்க இருந்த துன்பத்தை அறிந்த அக்கொடிகள் அவர்களை மாநகருள் வர வேண்டாம் என்பது போலக் கை அசைத்துத் தடுத்தனவாம். இவ்வாறு புலவர் கூறியுள்ளார். 

ஆனால் காற்று வீசுவதால் கொடிகள் அசைந்தன என்பதே உண்மையில் நடந்த நிகழ்ச்சி. அவ்வியற்கை நிகழ்ச்சியைத் தம் கருத்தை வெளிப்படுத்தப் புலவர் பயன்படுத்திக் கொண்டார்.

இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். 

தற்குறிப்பேற்ற அணி

தொடர்புடையவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad